ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி, அகற்றப்பட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஆணையிட்டதற்கு அமைய நேற்று (புதன்கிழமை) இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது.
‘இந்த முடிவு, வெளியிலிருந்து வந்த சட்ட அறிவுரை மற்றும் ஆபத்தை ஆராய்ந்து பல்கலைக்கழக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலுவிழந்த சிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டது’ என பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது.
8 மீட்டர் உயரம் கொண்ட அந்த செம்பு ஸ்தூபி இரவோடு இரவாக கட்டுமானத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள், சீனப் படையினரால் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் இந்த ஸ்தூபி ‘வெட்கக்கேட்டின் சின்னம்’ என்று அழைக்கப்பட்டது.
டசன் கணக்கான உயிரற்ற உடல்கள் மற்றும் வேதனையான முகங்கள் கொண்ட இந்த சிற்பம், பெய்ஜிங்கில் நடைபெற்ற தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவுகூரும் ஒருசில பொது நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இருந்தது.