பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் முகமூடி அணிந்த ஒரு நபர், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரித்தானிய அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக பேசும் கணொளி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்தக் காணொளியில் தன் பெயர் டர்த் ஜோன்ஸ் எனவும் அந்த நபர் கூறுகிறார். இந்த காணொளி ஸ்னாப்சாட் எனப்படும் தகவல் அனுப்பும் செயலியில் அவரைப் பின்தொடர்வோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, விண்ட்சரில் உள்ள அரச குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகை அருகே 19 வயது நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
சௌத்தாம்டன் பகுதியைச் சேர்ந்த அவரை மனநல பரிசோதனைக்காக பொலிஸார் அனுப்பியுள்ளனர். காணொளியில் மிரட்டல் விடுத்தவர் அவர்தானா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர் பேசிய காணொளி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் என்று பொலிஸார் கூறினர். எனினும், காணொளியில் காணப்பட்ட நபரின் அடையாளம் குறித்து கருத்து தெரிவிக்க பொலிஸார் செய்தித்தொடர்பாளர் மறுத்து விட்டார். பக்கிங்ஹாம் அரண்மனையும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.