தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி தயாரித்த ஆவணம் இனிமேல்தான் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படும் என்று தெரிகிறது.அது கையளிக்கப்படுவது என்பது ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வு. இங்கு அதைவிட முக்கியமானது என்னவெனில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும் என்று கேட்டிருப்பது தான்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது. அக்கட்சியானது கூட்டுக் கோரிக்கை முன் வைக்கப் பட வேண்டும் என்பதனை எதிர்க்கிறதா? அல்லது அக்கோரிக்கையாக 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்படுவதை எதிர்க்கிறதா ? என்பதனை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியுடன் உண்டா ?
இவ்வாறாக கடந்த சுமார் இரு மாத கால தமிழ் அரசியலை தொகுத்துப் பார்த்தால் இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் விடயத்தில் தமிழ்ப் பரப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் இரண்டு துலக்கமான வெளியுறவு நிலைப்பாடுகள் வெளித்தெரிய காணலாம்.
ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இயங்கும் எல்லா கட்சிகளும் ஒருமித்த வெளியுறவு தரிசனத்தை கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. ஒரு ஜனநாயக பரப்பில் பல்வகைமை இருக்கும். உதாரணமாக தென்னிலங்கை அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அமெரிக்க சார்பு வெளியுறவு நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அதிகம் தேசிய தன்மைமிக்க ஒரு வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்கும். எனவே ஆட்சிக்கு வரும் கட்சிகள் மாறும் பொழுது வெளியுறவு அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் அரசியல் பரப்பில் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் விடயத்தில் துலக்கமான இரண்டு போக்குகள் மேலெழுந்திருக்கின்றன.
இதில் இந்தியாவை நோக்கி கூட்டு கோரிக்கையை முன்வைக்கும் கட்சிகள் பிராந்திய பேரரசான இந்தியாவை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு சாதகமாக தலையிட வைப்பதை இறுதி இலக்கை கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. இந்த இடத்தில் ஒரு அடிப்படை ராஜீய நடைமுறையை சுட்டிக்காட்ட வேண்டும். இந்தியா இனப்பிரச்சினையில் இனிமேல்தான் தலையிட வேண்டும் என்றில்லை. ஏற்கனவே தலையிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் தலையீடு இருக்கிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு சாதகமாக இந்தியா தலையிட வேண்டும் என்பதே மேற்படி கட்சிகளின் உள்நோக்கமாக காணப்படுகிறது.
இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும்சரி சீனாவும் சரி இலங்கைத் தீவை கையாள்வது என்று வரும்பொழுது கொழும்பிலிருக்கும் அரசைத்தான் கையாண்டு வருகின்றன. கொழும்பை கையாள முடியாத போது அமெரிக்காவும் இந்தியாவும் தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு கொழும்பை பணிய வைக்கின்றன. இவ்வாறு கொழும்பை கையாளும் ஒரு அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் பொழுதுதான் இந்தியா தமிழ் மக்களின் பக்கம் நின்று இனப்பிரச்சினையில் தலையிடும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் கொழும்புடனான உறவுகளை நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் தமிழ் மக்களை நெருங்கிவர இந்தியா தயாரா? அவ்வாறு இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வைப்பதற்கு 13ஆவது திருத்தம் ஒரு பொருத்தமான கொழுக்கியா?
தமிழரசுக் கட்சி இம்முயற்சியில் உள்ளே நுழைந்ததும் கோரிக்கையின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் நலன்களுக்கும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கும் இடையிலான பொதுப் புள்ளிகளைக் கண்டுபிடித்து அவற்றை வைத்து பேரம் பேசத்தக்க தலைமைகள் தங்கள் மத்தியில் உண்டு என்பதை மேற்படி கட்சிகள் இனிமேல்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
அடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நிலைப்பாட்டை பார்க்கலாம். கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் பூகோள அரசியலைப் பற்றியும் புவிசார் அரசியல் பற்றியும் அதிகமாகப் பேசிய கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அவ்வாறு பூகோள புவிசார் அரசியலை வெற்றிகரமாக கையாள்வதன் மூலமே கிடைக்கும் என்று கூறிவந்த கட்சியும் அதுதான். எனவே ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் கட்சிகளை விடவும் துலக்கமான புத்திஜீவித்தனமான ஒரு வெளியுறவுத் தரிசனத்தை கொண்டிருப்பதாக தோற்றமளித்த அக்கட்சியானது அதன் புவிசார் அரசியல் அணுகுமுறை மற்றும் பூகோள அரசியல் அணுகுமுறை தொடர்பான வழி வரைபடத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன் முன்வைப்பதை அக்கட்சி எதிர்க்கின்றதா? அல்லது அக்கோரிக்கையாக 13வது திருத்தம் முன் வைக்கப்படுவதை அக்கட்சி எதிர்க்கிறதா? 13தான் பிரச்சினை என்றால் இந்தியாவை நோக்கி என்கேஜ் பண்ணுவதற்கான அக்கட்சியின் வழி வரைபடம் என்ன?
ஏனைய கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தொடர்பாக அக்கட்சி பகிரங்கமாக தெரிவித்து வரும் கருத்துக்களை தொகுத்து பார்த்தால் இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற ஒரு வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியிடம் உண்டா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மேற்படி கூட்டு கோரிக்கையை ஒன்றுகூடி தயாரித்த கட்சிகளை இந்தியாவின் கைக்கூலிகள் என்று அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வர்ணிக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை இந்தியாவின் ஆட்கள் என்று சொன்னால் அதன் பொருள் இந்தியாவும் எதிரி என்பதுதான். எனவே இந்தியாவோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியிடம் இருக்கிறதா என்ற கேள்வி மேலும் பலமடைகிறது. தவிர அக்கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்து பார்த்தாலும் அக்கட்சி இந்தியாவை கையாள வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை.
ஆயின், வேறு எந்தத் தரப்புக்களோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று அக்கட்சி நம்புகிறது? அது தொடர்பான வெளியுறவு வழிவரைபடத்தை அக்கட்சி முன்வைக்குமா? இந்தியாவை தவிர்த்துவிட்டு பூகோள அரசியலையும் புவிசார் அரசியலையும் எப்படி கையாளப் போகிறது என்பதனை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.கடந்த 12 ஆண்டுகளில் அந்த வெளியுறவுத் தரிசனத்தை நோக்கி அக்கட்சி என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது என்பதனையும் வெளிப்படுத்த வேண்டும். பிராந்தியத்துக்கு வெளியில் உள்ள பேரரசுகளை கையாள்வதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளில் அக்கட்சி தமிழ் அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இப்பொழுது தொகுத்து பார்க்கலாம். இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கை ஒன்றை அனுப்பும் விடயத்தில் தமிழ் கட்சிகள் இரண்டு போக்குகளை வெளிக்காட்டியுள்ளன. ஒரு ஜனநாயக பரப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குகள் இருக்கும். வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ள காரணத்தால்தான் கட்சிகள் ஒன்றுபடாமல் பிரிந்து நிற்கின்றன. எனவே வெளியுறவுக் கொள்கை பொறுத்து வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பது யதார்த்தம்.ஆனால் அவை நிலைப்பாடுகளாக மட்டும் இருக்க முடியாது. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை; அதுவும் நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை;இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறுவதற்காக கிடைக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் தமிழ் மக்களைப் பொருத்தவரை ; வெளியுறவு நிலைப்பாடு என்பது இலட்சிய வாசகங்கள் அல்ல. அல்லது குழந்தைப் பிள்ளைகளுக்கு நிலவை கண்ணாடியில் காட்டும் விவகாரமும் அல்ல. மாறாக அது தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் இன்றியமையாத ஒரு பகுதி. எனவே அது கற்பனையல்ல. விருப்பங்களும் அல்ல. மாறாக நடைமுறைப்படுத்த வேண்டிய இலட்சியங்கள். எனவே இந்தியாவை நோக்கி கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் சரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சரி தமது வெளியுறவு நிலைப்பாடுகளை நோக்கி உழைக்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். செய்வார்களா?