ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆயத்தமாகி வருகின்றனர்.
நேற்று (திங்கட்கிழமை) நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், துருக்கியில் இன்று ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன், முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், பேச்சுவார்த்தை நன்றாக நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ போடோலியாக், வார இறுதி பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று கூறியதையடுத்து, இராஜதந்திர முன்னேற்றம் பற்றிய நம்பிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
ரஷ்யா ஏற்கனவே ஆக்கப்பூர்வமாக பேசத் தொடங்கியுள்ளது என்றும் சில நாட்களில் சில முடிவுகளை நாம் அடைவோம் என்று நான் நினைக்கிறேன் என்றும் முன்னதாக, பொடோலியாக் கூறியிருந்தார்.
இதனிடையே நேற்றைய பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, நான்காவது சுற்று பேச்சுவார்த்தை போர்நிறுத்தம், ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுதல் மற்றும் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என கூறியிருந்தார்.