நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் எனில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை சர்வகட்சிகளின் மாநாட்டில் வலியுறுத்துவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் வெளிப்படுத்தவுள்ள விடயங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாவும் அதற்காக இரு பிரதிநிதிகளின் பெயர் கோரப்பட்ட நிலையில் தன்னுடையதும் சுமந்திரனுடையதும் பெயரை வழங்கியுள்ளதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை எட்டுவதாக இருந்தால் மக்களுக்கான இறைமை பகிரப்பட வேண்டும் என்றும் இறைமை பகிரப்படுத்தப்பட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு விசேடமாக தமிழ் மக்கள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளையும் சர்வகட்சி மாநாட்டில் எடுத்துக் கூறவுள்ளதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.