உள்நாட்டில் அரசியல் சவால் மற்றும் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது அரசாங்கத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னால் அமெரிக்கா இருப்பதாக கருதுகின்றார்.
இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ), ‘எதிர்க்கட்சியின் தற்போதைய நடவடிக்கைக்கு, அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச ஸ்தாபனம், மறைமுகமாக அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படும் பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகின்றது’ என ஜோன் அச்சக்ஷாய் என்பவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
தி நியூஸ் இன்டர்நேஷனல் ஊடகத்தின் எழுத்தாளரும், பலுசிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதியும், பலுசிஸ்தான் அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மூலோபாயத் தொடர்பு பற்றிய முன்னாள் ஆலோசகருமான ஜோன் அச்சக்ஷாய் ‘பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை பாதிக்கும் திறன் அமெரிக்காவிடம் இன்னும் இருக்கிறதா? ஆட்சியை மாற்றும் கூற்று உண்மையானதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்து சில நாட்களுக்கு பின்னர் மொஸ்கோவிற்கு விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் உற்சாகமாகவே நாடு திரும்பியிருக்கின்ற போதும் அண்மைய நாட்களில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக அடிக்கடி தனது அறிவிப்புகளை வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டிருக்கின்றார்.
பிரதமர் இம்ரான் கான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்தபோதும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளோ அல்லது திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்களோ எவையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் கானின் இந்த விஜயத்தினை வெறும் புகைப்படத்திற்கானது என்ற விமர்சனங்கள் உள்நாட்டில் அதிகரிக்க ஆரம்பித்தன. இருப்பினும், விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர் ‘இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டேன்’ என்று நியாயப்படுத்தினார்.
இந்த நிலையில் பிரதமர் கான், கடந்த வாரம் தனது மேற்குல எதிர்ப்பு நிலைப்பாட்டை மீண்டும் கையிலெடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள படையெடுப்பைக் கண்டிக்குமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் இதற்கு இஸ்லாமாபாத்தில் உள்ள மேற்கத்திய தூதுவர்களே காரணமாக உள்ளதாகவும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் நடுநிலை வகிக்க விரும்புகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் கானின் இந்தச் செயற்பாடானது உள்நாட்டில் மேற்கத்தேய எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் இச்செயற்பாடானது மிகவும் எளிதானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் பாகிஸ்தானின் படைத் தளபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கு சார்புடையவர்களாக தம்மைக் காண்பித்து அதிலிருந்து பெரும் பயனடைந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
குறிப்பாக, பாகிஸ்தான் பனிப்போர் கால மத்திய ஒப்பந்த அமைப்பு மற்றும் தென்கிழக்காசிய ஒப்பந்த அமைப்பு ஆகிய இராணுவ ஒப்பந்தங்களில் பங்காளியாக இருந்துள்ளது.
2001இல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான படையெடுபபு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நேட்டோ அமைப்பில் அல்லாத நட்பு நாடாக பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் 2001ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் பாகிஸ்தான் அரசாங்கங்கள் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டின.
இவ்வாறிருக்கையில், கடந்த ஆகஸ்டில் ஆப்கான் தலைநகர் காபூலுக்கு தாலிபான்கள் திரும்புவதற்கு பாக்கிஸ்தான் தீவிரமாக உதவியமையால் அமெரிக்கா அவசரமாகவும் குழப்பமான நிலையிலும் வெளியேற வேண்டியிருந்தது.
பாகிஸ்தானின் இந்தச் செயற்பாடானது, வொஷிங்டனில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடனின் நிருவாகத்திற்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தின் தீவிர ஆதரவு தேவையில்லை என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது.
இதனைத் தாடர்ந்து, பைடன் நிர்வாகம், தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தானின் வகிபாகத்தினை இன்னுமும் கண்டறியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்நிலையில், ‘பைடனின் நிருவாகம் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் இழிவான செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை. பைடன் தலைமையில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக மாநாட்டில் கூட பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்பதை அச்சக்ஷாய் மீட்டிக் குறிப்பிட்டார்.
இதேநேரம், ‘குறித்த மாநாட்டை புறக்கணிப்பதாக கூறிய பாகிஸ்தான் புறக்கணிப்புக்கான எந்தவொரு நியாயமான காரணத்தையும் முன்வைக்கத் தவறிவிட்டது.
அரசாங்கம் ஜனநாயக மாநாட்டில் இணைந்திருந்தால், ஜனநாயகத்தின் மீதான அமெரிக்க பாசாங்குத்தனம் என்று கருதப்படும் அதன் நிலைப்பாட்டை வலியுறுத்துவது சிறப்பாக இருந்திருக்கும்,’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் ரஷ்யாவைக் கண்டிப்பதற்கு முனையாது, உக்ரையும், ரஷ்யாவையும் அவற்றுக்கு ஆதரவான தரப்புக்களையும் சமநிலைப்படுத்த முயன்றது அதேநேரம் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைக் கண்டித்து ஐ.நா.பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் கூட பாகிஸ்தான் வாக்களிக்கவில்லை.
பாகிஸ்தான் இந்த முடிவானது, அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகத்தினைப் பொறுத்தவரையில் ரஷ்யாவின் பக்கம் சார்ந்துள்ளதாகவே கருதவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டன.
இருப்பினும், ‘அமெரிக்காவின் தீர்மானத்தினை மீறியமைக்காக பிரதமர் இம்ரான் கானை, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படும் கதையானது, ஜனரஞ்சகப் போக்கு பிரசாரமாகவே உள்ளது. இதற்கு பின்னால் உள்நாட்டு சக்திகள் உள்ளன’ என்று அச்சக்ஷாய் சுட்டிக்காட்டியுள்ளார்.