சீனாவின் நிதி மையமான ஷாங்காய், அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளுக்கான புதிய தினசரி பதிவைப் பதிவுசெய்ததன் பின்னர் முடக்கப்பட்டுள்ளது.
ஒன்பது நாட்களுக்குள் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள இரண்டு கட்டங்களாக நகரத்தை முடக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளுது.
ஷாங்காய் நகரின் வழியாக செல்லும் ஹூவாங்பு நதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி,ஷாங்காயை இரண்டாகப் பிரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்றின் கிழக்கே உள்ள மாவட்டங்கள் மற்றும் அதன் மேற்கில் உள்ள சில மாவட்டங்கள் மார்ச் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி வரை முடக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும்.
மீதமுள்ள பகுதிகள் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 5ஆம திகதி வரை முடக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும்.
பொது சேவைகளை வழங்குவதிலும் அல்லது உணவு வழங்குவதிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைத் தவிர, அனைத்து நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் முடக்கநிலையின் போது உற்பத்தியை அல்லது தொலைதூரத்தில் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
‘பொதுமக்கள் நகரின் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை ஆதரிக்கவும், புரிந்து கொள்ளவும், ஒத்துழைக்கவும், நியூக்ளிக் அமில சோதனையில் ஒழுங்கான முறையில் பங்கேற்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து சீனா அதன் மிகப்பெரிய நகரமான ஷாங்காய்யை முடக்கவில்லை.
ஒரு மாத காலமாக புதிய தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடிவரும் ஷாங்காய், பொருளாதாரத்தை சீர்குலைப்பதைத் தவிர்ப்பதற்காக சுமார் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை முடக்குவதை அதிகாரிகள் இதுவரை எதிர்த்துவந்தனர்.
ஆனால் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களிலிருந்து சனிக்கிழமையன்று ஷாங்காய் அதன் அதிகபட்ச தினசரி தொற்றுகளைப் பதிவுசெய்த பிறகு, அதிகாரிகள் போக்கை மாற்றியதாகத் தெரிகிறது.
ஷாங்காய் நகரம் 2,631 புதிய அறிகுறியற்ற தொற்றுகளைப் பதிவுசெய்தது. இது சீனாவின் மொத்த புதிய அறிகுறியற்ற தொற்றுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும் அறிகுறிகளுடன் 47 புதிய தொற்றுகளும் அடங்கும்.