பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எவ்வாறு உதவலாம் என ஆராயுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளவிருந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த செய்தியை அறிந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், தாம் மிகுந்த வருத்தமடைந்ததாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இந்தியா உதவக்கூடிய வழிகள் குறித்து ஆராயுமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இந்திய வௌிவிவகார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திகதியிடப்பட்டிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
விநியோகஸ்தர்களின் தாமதம் காரணமாகவே சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தொன்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இது குறித்து ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்தை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பேராதனை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் குறித்த மருந்து மிகக்குறைந்தளவே கையிருப்பிலுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, 248 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 16 அத்தியாவசிய மருந்துகளுக்கான கடன் கடிதங்களை துரிதமாக வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றா நோய்கள், இருதய நோய்கள் உள்ளடங்கலாக பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் 16 வகையான மருந்துகளும் இதில் அடங்குகின்றன.
இதேவேளை, தேவையான மருந்துகள் வழங்கப்படுமென மருந்து விநியோக பிரிவினால் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக பேராதனை போதனா வைத்தியாலை தெரிவித்துள்ளது.