பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்ற கீழவையில் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மார்ச் 31ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான அறிக்கையை நாடாளுமன்றச் செயலகத்தில் கடந்த மார்ச் 8ஆம் திகதி அளித்தன.
இதன் மீதான விவாதத்தை தொடங்குவதற்காக நாடாளுமன்றம் மார்ச் 25ஆம் திகதி கூடியது. ஆனால், அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அவையை 28ஆம் திகதி மாலை வரை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
இதன்படி, நாடாளுமன்றம் நேற்று (திங்கட்கிழமை) காலை கூடியது. எதிர்க்கட்சித் தலைவரும் பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷேபாஸ் ஷெரீஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்தார்.
அவைத் தலைவர் ஆசாத் கைதர் இல்லாத நிலையில், அவையை வழிநடத்திய துணைத் தலைவர் காசிம் கான் சுரி, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி, தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 161 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான வாக்கெடுப்பு 3-7 நாட்;களில் நடத்தப்படும் என்பதால், துணைத் தலைவர் காசிம் கான் சுரி, அவையை மார்ச் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக அன்றைய தினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க இம்ரான் கானுக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக இதுவரை உறுதியளிக்கவில்லை.
மேலும், அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியை சேர்ந்த சுமார் 20 உறுப்பினர்கள் இம்ரானுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் இம்ரான் பதவியில் தொடர்வாரா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.