ஐ.பி.எல். ரி-20 தொடரின் 33ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
மும்பையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திலக் வர்மா ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், முக்கேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகளையும் பிராவோ 2 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அம்பத்தி ராயுடு 40 ஓட்டங்களையும் ரொபின் உத்தப்பா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், டேனியல் சேம்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளையும் ரிலே மெரிடித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முக்கேஷ் சௌத்ரி தெரிவுசெய்யப்பட்டார்.