கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படையினர் பாதுகாப்பான தூரத்தில், பிரித்தானிய உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இரும்பு தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ள வீரர்கள் கொல்லப்பட்டால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது எனவும் கூறினார்.
இதனிடையே, உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கள் தொடரும். அதே நேரத்தில் மூன்றாம் உலகப் போரின் உண்மையான ஆபத்து இருக்கிறது என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார்.
மரியுபோல் நகரை முற்றுகையிட்டு பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படையினர், நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரர்களும் அவர்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த சர்ச்சைக்குரிய அஸோவ் படையினரும் மரியுபோலில் உள்ள 10 கி.மீ. பரப்புடைய அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுடன் சுமார் 1,000 பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.