அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருந்ததாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மருந்து, உணவு மற்றும் உர விநியோக பிரச்சினைகளுக்கு ஆதரவளிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நிதி உதவிக்காக வெளிநாட்டு கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக செலுத்த தேவையான நிதியை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் உடனடி சவாலாகும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
வங்கிகளில் டொலர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தேவையான நிதியை திரட்ட அரசு தற்போது வேறு வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்த முழுமையான விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.