மோட்டோ ஜிபி பந்தயத்தின் கேடலூனியா கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ, சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.
அந்த வகையில் ஆண்டின் ஒன்பதாவது சுற்றான கேடலூனியா கிராண்ட் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்சிலோனா- கேடலூனியா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதில் 111.8 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 25 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.
இதில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ, பந்தய தூரத்தை 40 நிமிடங்கள், 29.360 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, டுகார்டி அணியின் ஜோர்ஜ் மார்டின், 6.473 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்
இவரையடுத்து, டுகார்டி அணியின் ஜோஹன் சர்கோ, 8.385 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஒன்பது சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ இரண்டு சம்பியன் பட்டங்களுடன் 147 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ ஒரு சம்பியன் பட்டத்துடன் 125 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டுகார்டி அணியின் எனே பாஸ்டியானினி மூன்று சம்பியன் பட்டங்களுடன் 94 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
பத்தாவது சுற்றான டெய்ட்ஸ்ச்லாந்த் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 19ஆம் திகதி சச்சென்ரிங் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.