காலி – கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக முன்னதாக டோக்கன் பெற்ற சிலர், தமக்கு எரிபொருள் வழங்கும் வரையில் வைத்தியர்களோ அல்லது அத்தியாவசிய சேவைகள் எனக் கூறிக்கொள்ளும் எவருக்கும் எரிபொருளை வழங்க அனுமதிக்கப்படமாட்டாது எனக் கூறி அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலி கோட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எரிபொருள் வரிசையில் டோக்கன் பெற்ற ஒரு குழுவினர் அதே இடத்தில் வீதியில் அமர்ந்து வேறு எந்த வாகனத்தையும் எரிபொருள் எடுக்க அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்க ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சிபெட்கோ நிறுவனம் இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பவுசரை அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், டோக்கன் பெற்றவர்கள் எரிபொருள் பெற்ற பின்னர், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.