தாய்வான் தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி, போர் பயிற்சி மேற்கொண்டுவரும் சீனா, தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அங்கமாக தற்போது ஜப்பான் சென்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று (வெள்ளிக்கிழமை) தலைநகர் டோக்யோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எங்களுடைய பயண நிரலை வடிமைப்பது சீனா கிடையாது. அமெரிக்க அரசியல் தலைவர்கள் தாய்வானுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக சீனா தடை விதித்தாலும் அந்த நாடு, தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என கூறினார்.
தாய்வான் தீவின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியில் போர் ஒத்திகையை மீண்டும் தொடங்கியுள்ளதாக சீன ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.
விமானப்படை மற்றும் கடற்படையின் போர் தளவாட திறன்களை பரிசோதிக்கும் நடவடிக்கையாக இந்த கூட்டுப்படை ஒத்திகை நடத்தப்படுவதாக சீன விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவுக்கான சீன தூதரை நேற்று வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் அழைத்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.