மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலியாக, அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தைகளை சீனா இரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘காலநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா – சீனா இடையே நடைபெறவிருந்த சந்திப்பை ரத்து செய்கிறோம். மேலும், பாதுகாப்பு தொடர்பாக நடைபெறவிருந்த ராணுவத் தலைவர்களின் சந்திப்பையும் ரத்து செய்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சீனாவும், அமெரிக்காவும்தான் கார்பனை அதிகளவில் வெளியிடுகின்றன.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டிலும் சுட்டிக் காட்டப்பட்டன. இந்த நிலையில், கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்துவதன் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்தச் சந்திப்பை சீனா இரத்து செய்துள்ளது.
இந்த நிலையில் நான்சி பெலோசி மீதும் அவரது குடும்பத்தினர்கள் மீதும் சீனா பொருளாதாரத் தடைகள் விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தாய்வானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தாய்வானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார்.
நான்சியின் இப்பயணத்துக்கு கடும் அதிருப்தியை தெரிவித்த சீனா, நான்சியின் வருகை காரணமாக தாய்வான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.