இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஒல்லி போப் 73 ஓட்டங்களையும் ஸ்டோக்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ரபாடா 5 விக்கெட்டுகளையும் நோக்கியா 3 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாரெல் எர்வீ 73 ஓட்டங்களையும் மார்கோ ஜென்ஸன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புரோட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மெட்டி பொட்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 161 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 149 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணி, இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஸ்டுவர்ட் புரோட் மற்றும் அலெக்ஸ் லீஸ் ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோக்கியா 3 விக்கெட்டுகளையும் ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் என மொத்தம் 7 விக்கெட்டுகளை சாய்த்த கார்கிஸோ ரபாடா தெரிவுசெய்யப்பட்டார்.