கடந்த 2017ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் கடத்தப்பட்ட சீன- கனடிய கோடீஸ்வரர் ஒருவர் ஷாங்காயில் இரகசியமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு சீனா 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், கோடீஸ்வரரான சியாவோ ஜியான்ஹூவாவின் நிறுவனமான டுமாரோ ஹோல்டிங்ஸ் மீது 6.5-மில்லியன் யுவான் (1.2-மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஷியோ ஜியான்ஹூவா என்பவர், சட்டவிரோதமாக பொது வைப்புத்தொகைகளை சேகரித்தல், நம்பகத்தன்மையை மீறும் வகையில் ஒப்படைக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோதமாக நிதி மற்றும் லஞ்சம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார் என ஷாங்காய் எண்.1 இடைநிலை மக்கள் நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சியாவோவும் அவரது நிறுவனமும் நிதி மேலாண்மை ஆணையை கடுமையாக மீறியுள்ளனர் மற்றும் மாநில நிதிப் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் நீதிமன்றம் கூறியது.
சியாவோவும் அவரது நிறுவனமும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாகவும் அதனால் அவர்களின் தண்டனை தணிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.
ஜூலை மாதம், கனேடிய தூதரகம் தனது இராஜதந்திரிகளுக்கு விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறியது.
ஆனால், தற்போது சியாவோ, தங்கள் நாட்டு குடிமகன் என்பதால், இந்த வழக்கில் கனடா தூதரகம் சட்ட உதவி அளிப்பதற்கு அனுமதியில்லை என்று சீன அரசாங்கம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் குடும்பம் உட்பட ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் சியாவோ நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
2016ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் பணக்காரர்களின் தரவரிசையான ஹூருன் அறிக்கையின்படி அவரது நிகர மதிப்பு 6 பில்லியன் அமெரிக்க டொல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.