பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் மத்திய மாகாண தோட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளுநருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மத்திய மாகாணத்தில் பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி மற்றும் பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (10) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர, கிருஷ்ணன் கலைச்செல்வி, தனுர திசாநாயக்க, மாவட்ட செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கோட்டம் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தோட்ட பாடசாலைகள் வெவண்டன், எல்ஜின், யோக்ஸ்போர்ட் போன்ற பாடசாலைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், ஆசிரியர் பற்றாக்குறை, மத்திய மாகாண பட்டதாரிகள் நியமனம், கடந்த காலங்களில் மாகாணம் மற்றும் வலய கல்வி பணிமனைகளில் அதிகாரிகளின் தோட்ட பாடசாலை மேற்பார்வைகள் குறித்தும், தோட்ட பாடசாலைகளில் முன் பள்ளிகளின் தேவைப்பாடுகள் அதன் நிர்வாகம், அதற்குரிய விசேட தேவைகள் குறித்தும், நுவரெலியா
மாத்தளை, மற்றும் கண்டி மாவட்டங்களில் சகல வசதிகளையும் கொண்ட 1AB பாடசாலைகள் தொடர்பாகவும், 13 ஆண்டு கல்வித் திட்டம், விளையாட்டுத்துறை, தோட்ட பாடசாலைகளின் ஆசிரியர் விடுதிகள், தமிழ் மொழி மூலமான ஆசிரியர் ஆலோசகர்களின் தேவைப்பாடுகள், தோட்ட பாடசாலைகளின் காணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு, மத்திய மாகாணத்தில் உள்ள பதில் அதிபர்களின் தரம் உயர்த்தல், ஆசிரியர், அதிபர்கள் இடமாற்றங்கள், ஆசிரியர் தகமை பரீட்சை (MODULES) குறித்தும் மிக நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டு சுமுகமான தீர்வு எட்டப்பட்டது.
அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதிவியுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மூலம் கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடர்பாகவும் மாத்தளை பாக்கியம் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டிடங்கள் தொடர்பான தாமதங்கள் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
இதன் போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசகரும்
கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட சிரேஷ்ட நிறைவேற்று குழுவின் அங்கத்தினருமான கலாநிதி
பி.பி. சிவப்பிரகாசம் அவர்களும் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி ரமேஷ் ராமசாமி ஆகியோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.












