அரசாங்கத்திற்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் தற்போதைய ஜனாதிபதியும் சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என மார்தட்டி வீர வசனம் பேசிய கோட்டாபய ராஜபக்ஷ இறுதியில் இலங்கையைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர எத்தனிக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.