இம்மாதம் பன்னிரண்டாம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்றது.இக்கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு எதிரான போக்கு அதிகமாகக் காணப்படலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் கடந்த 13 ஆண்டு கால அனுபவத்தின்படி, அதிலும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.அதாவது,இம்முறை ஜெனிவாவில் ரணில் விக்கிரமசிங்கவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் பெரியளவுக்கு இருக்காது.
கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தொகை குறைந்து வருவதைக் காணலாம்.பெருந்தொற்று நோய் ஒரு காரணம். எனினும்,தொடர்ச்சியாக ஜெனிவாவை நோக்கி போவதில் ஏற்பட்ட சலிப்பு, ஜெனிவா கூட்டத்தொடர்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு உருப்படியான தீர்வு கிடைக்காது என்று ஏமாற்றம்,போன்றவற்றின் விளைவாகவும் தாயகத்திலிருந்து ஜெனிவாவை நோக்கிச் செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறையத்தொடங்கி விட்டது.
அதேசமயம் இம்முறை ஜெனிவாவில் ஒரு புதிய தோற்றப்பாட்டை நாம் காணக்கூடியதாக உள்ளது.இம்முறை சிங்கள டயஸ்பொறாவின் ஒரு பகுதி அரசாங்கத்துக்கு எதிராக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறது. அண்மை ஆண்டுகளாக ஜெனிவாவில் சிங்கள மக்களும் ஆங்காங்கே எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் அந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவும் தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கு எதிரானவை. தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு எதிரான நீதியை கேட்டு ஜெனீவாவை நோக்கி ஊர்வலம் போவார்கள். அதற்கு எதிராக சிங்கள டயஸ்பொறாவில் இருந்து அமைப்புகளும் தனி நபர்களும் அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவார்கள்.அந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுண்டு. அதாவது இந்த ஆண்டுக்கு முன்பு வரை ஜெனிவாக் களம் என்பது தமிழ் டயஸ்பொறா எதிர் சிங்கள டயஸ்பொறா என்பதாகவே காணப்பட்டது.ஆனால் இம்முறை இதில் துலக்கமான ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.அது என்னவெனில், சிங்கள டயஸ்பொறாவின் ஒரு பகுதி அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யத்தொடங்கி இருக்கிறது. அரகலயவுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை எதிர்த்து மேற்படி ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு பின்னணியில்,அதற்கு எதிராக உதிரிகளான மிகச்சிறிய தொகை சிங்கள மனித உரிமைப் பாதுகாவலர்களே குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள்.ஆனால் இம்முறை அரகலவுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சிங்கள டயஸ்பொறாவுக்குள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.அவர்கள் ஐநாவில் நீதி கேட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு நீதி கேட்டு பாப்பரசரிடமும் ஐநாவிடமும் சென்றிருந்தார்.அதன் அடுத்த கட்டமாக இப்பொழுது அரகலயவுக்கு நீதி கேட்டு சிங்கள டயஸ்பொறாவின் ஒரு பகுதி ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறது.
இதுவரை காலமும் அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் மக்கள்தான் பெருமளவுக்கு ஊர்வலம் போனார்கள்.குறிப்பாக ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின் முஸ்லிம்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்களை குறித்து ஐநாவில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இம்முறை சிங்கள மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிராக மூன்று இனத்தவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது.இப்படிப் பார்த்தால் இம்முறை ஜெனிவாக்களம் எனப்படுவது அரசாங்கத்திற்கு அதிகம் பாதகமான ஒரு களமாகவே தோன்றும். ஆனால் அது ஒரு வெளித்தோற்றம் மட்டுமே. இலங்கைத்தீவில் வாழும் மூன்று இனங்களும் அரசாங்கத்துக்கு எதிராக வெவ்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன என்பது இலங்கை தீவின் அரசாங்கமானது அந்த நாட்டின் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதன் பொருள் ஐநாவில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகப் போகிறது என்பது அல்ல.
இலங்கைத்தீவில் வாழும் மூன்று இனங்களும் அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைப்பது என்பது ஒரு விதத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பலவீனமான ஒரு நிலைமைதான். அதேசமயம் தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் அது இனப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை சிதறடிக்கக்கூடிய ஒரு போக்கும்தான். ஏற்கனவே மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் விவகாரம் ஒரு இனப் பிரச்சினையாக அணுகப்படுவதை விடவும் மனித உரிமைகள் விவகாரமாகவே அணுகப்பட்டு வருகிறது.அதனால்தான் ஐநா தீர்மானங்களில் அரசியல் அடர்த்தி மிக்க சொற்களைக் காண முடிவதில்லை. அது மட்டுமல்ல கடந்த ஆண்டுக்கு முன்புவரை தமிழ் என்ற வார்த்தை ஐநா தீர்மானத்தில் பயன்படுத்தப்படவில்லை.அதாவது ஐநா தீர்மானங்களில் இலங்கை விவகாரம் அதற்குரிய இனப் பரிமாணத்தோடு வெளிப்படுத்தப்படவில்லை.மாறாக,அது ஒரு மனித உரிமை விவகாரமாகத்தான் சட்டகப்படுத்தப்பட்டிருந்தது. ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னரே அது இலங்கைத் தீவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் மதங்கள் போன்றவற்றுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைப் பற்றித்தான் பேசியது. ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பின் அது துலக்கமான விதங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசியது.இம்முறை அது அரகலயவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பேசக்கூடும்.
அதாவது, முழு இலங்கைத் தீவு முழுவதும் நிகழும் மனித உரிமை மீறல்களின் ஒரு பகுதியாகத்தான் இனப்பிரச்சினை பார்க்கப்படும் ஒரு நிலைமை ஐநா தீர்மானங்களில் தொடர்ச்சியாக காணப்பட்டுவந்தது.இம்முறை அரகலயவுக்குப் பின் அப்போக்கு புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அப்டேட் பண்ணப்படும் ஒரு நிலைமைதான் அதிகமாக தெரிகிறது. இதில் 46ன் கீழ் ஒன்று தீர்மானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஒரு புதிய தீர்மானம் வர முடியும்.ஆனால் நிச்சயமாக அது ரணில் விக்ரமசிங்கவின் மடியில் கை வைக்காது.
முன்னைய தீர்மானத்தின்படி சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்பொறி முறைக்கு வழங்கப்படும் நிதியை குறைத்த காரணத்தால் அப்பொறி முறைக்குள் உள்ளடக்கப்படும் நிபுணர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அதன் செயற்படு காலமும் குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் அப்பொறிமுறைக்குள் 13நிபுணர்கள் தொழிற்படுவர் என்று கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது எட்டு நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.மேலும் அப்பொறிமுறையானது நாட்டுக்குள் இறங்கி செயல்படும் நிலைமை கிடையாது. அது நாட்டுக்கு வெளியே புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்தான் பெருமளவுக்கு செயல்படலாம்.வேண்டுமானால் நாட்டுக்குள் ரகசியமாக செய்யப்படலாம்.ஆனால் அங்கேயும்கூட ரணில் விக்ரமசிங்கவுக்கு நோகக் கூடிய விதத்தில் அதை ரகசியமாகச் செய்ய ஐநா முன் வருமா என்ற கேள்வி உண்டு.
இந்தவிடயத்தில் ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்கும் ஒருவராகத்தான் சஜித் பிரேமதாசவும் காணப்படுகிறார்.பெரும்பாலான தென்னிலங்கை கட்சிகள் இந்தவிடயத்தில் நாட்டை பாதுகாக்கும் ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளன.
எனவே ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய நடைமுறைகள் முன்னய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பலவீனமாகத்தான் தெரிகின்றன.குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராமல் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார். மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை கத்தியின்றி,ரத்தமின்றி,தேர்தல் இன்றி நடந்த ஒரு ஆட்சி மாற்றம் அது. அந்த ஆட்சி மாற்றத்தை எப்படிப் பலப்படுத்தலாம் என்றுதான் அவை சிந்திக்கும். அந்த ஆட்சி மாற்றத்தை பலப்படுத்துவது என்றால் ரணில் விக்கிரமசிங்கவை பலவீனப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஐநா முன்னெடுக்காது. இதுதான் இந்த ஆண்டு ஜெனிவா யதார்த்தம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது புதியது அல்ல. கடந்த 13 ஆண்டு கால ஜெனிவாவை நோக்கிய காத்திருப்பில் தமிழ்மக்கள் பெருளவுக்கு நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஜெனிவாவில் தமக்கு நீதி கிடைக்காது என்று இப்பொழுது தமிழ்மக்களுக்கு தெளிவாகத் தெரியும். அதனால்தான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து விவகாரத்தை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று கேட்டன.விவகாரத்தை மனித உரிமைகள் பேரவையிடமிருந்து ஐநா பொதுச்சபை கையேற்க வேண்டும் என்றும்,அதன் பின் அது அனைத்துலக நீதிமன்றங்களை நோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் மூன்று கட்சிகளும் கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.
2009 க்கு பின் தமிழ்த் தரப்பில் இருக்கும் பிரதான கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரண்டு ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பியமை என்பது மிக அரிதான ஒரு புறநடைதான்.இந்த ஆண்டும் ஜெனிவாவை நோக்கி அவ்வாறான கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை அக்கூட்டு முயற்சிகளுக்குள் ஒருங்கிணைக்க முடியவில்லை. அண்மையில் ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை. எனவே மெய்யான பொருளில் அவற்றைக் கூட்டுக் கடிதங்கள் என்று கருதமுடியாது.
ஜெனிவாவைக் கையாள்வது தொடர்பில் ஒப்பீட்டளவில் அதிகம் புத்திபூர்வமான விளக்கத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கொண்டிருக்கின்றது. ஆனால்,நடைமுறைச் சாத்தியமான நகர்வுகள் எவையும் அக்கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.அக்கட்சியை ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை பெரும்பாலான சிவில் சமூகங்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் அனேகமாக இழந்து விட்டார்கள்.அதன் விளைவாகத்தான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னிருந்து இன்று வரையிலும் ஜெனிவாவை நோக்கியும் அனைத்துலக சமூகத்தை நோக்கியும் அனுப்பப்படும் கூட்டு கோரிக்கைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்பு இருக்கவில்லை. அந்தக் கட்சியை தவித்துவிட்டு ஏனைய கட்சிகள் ஒன்றாக செய்யப்படும் ஒரு போக்கைத் தான் அரங்கில் காண முடிகிறது.
இவ்வாறு தமிழ்த் தரப்பு இரு வேறு தரப்புகளாக ஜெனிவாவை அணுகி வரும் ஒரு பின்னணியில், சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் இன்றி அனைவரும் நாட்டை பாதுகாப்பதற்காக ஒன்று திரண்டு நிற்கிறார்கள்.பிரதமர் தினேஷ் குணவர்த்தன,பயங்கரவாதத் தடைச்சட்டம் அரகலயவுக்கு எதிராகப் பயன்படுத்தப் படமாட்டாது என்று அண்மையில் கூறியிருப்பது,ஜெனிவாவில் அரசாங்கத்தை எதிர்க்கும் சிங்கள டயஸ்போறாவின் எதிர்பைத் தணிக்கக்கூடும்.
இவைதவிர சீனா,ஜெனிவாவில் திட்டவட்டமாக அரசாங்கத்தை ஆதரிக்கிறது.இம்முறையும் சீனாவின் நிலைப்பாடு அரசாங்கத்துக்கு ஆதரவாகவே காணப்படும் என்று தெரிகிறது. அண்மையில் கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் ருவிட் பண்ணிய செய்தியின்படி,சீனா இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாகவே நிற்கும் என்று தெரிகிறது.
சீனாவின் இந்த நிலைப்பாடு காரணமாக ஜெனிவாவில் இலங்கை பொறுத்து ஒரு விதமான பனிப்போர் சூழல் தோற்றம் பெற்று வருவதை காணலாம். இது தமிழ் மக்கள் தமக்குச் சாதகமாகக் கையாள வேண்டிய ஒரு தோற்றப்பாடு.ஆனால் தமிழ்த்தரப்பிடம் அதுதொடர்பான ஒன்றிணைந்த முயற்சிகளோ,பொருத்தமான வெளியுறவுக் கொள்கையோ,வெளியுறவு கட்டமைப்போ கிடையாது.