ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சீனாவில் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில், தற்போது அங்கு நடந்தேறியுள்ள வெளிப்படையான போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஸி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
அத்துடன், ஸி ஜின்பிங் கொவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகள் பெய்ஜிங்கில் உள்ள சிடோங் பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.
சீன மொழியில் எழுதப்பட்டு வெளியாகியிருக்கும் பதாகையில், கொரோனா பரிசோதனை வேண்டாம், உணவு வேண்டும். லாக்டவுன் வேண்டாம், சுதந்திரம் வேண்டும். பொய்கள் வேண்டாம், கண்ணியம் வேண்டும். கலாசாரப் புரட்சி வேண்டாம், சீர்திருத்தம் வேண்டும்.
பெரும் தலைவர் வேண்டாம், ஓட்டுரிமை வேண்டும். அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு’ எனச் சொல்லப்பட்டுள்ளது.
அதே பாலத்தில் தொங்கவைக்கப்பட்டுள்ள மற்றொரு பதாகையில், ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள், சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஸி ஜின்பிங்கை அகற்றுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பதாகைகள் கொண்ட புகைப்படங்களோடு அந்நாட்டு சமூக வலைதளங்களில் ‘நான் பார்த்தேன்’ (சீன ஜனாதிபதி) ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
எனினும், இந்த அமைதி புரட்சிக்கு காரணமானவர்கள் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தேசிய மாநாட்டில் மீண்டும் அவரே பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றும் அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு, மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக அவரே பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படியான நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையாக போராட்டம் நடந்துள்ளது.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வார கூட்டம் தினான்மென் சதுக்கத்தில் உள்ள கிரேட் ஹாலில் தொடங்கியுள்ளது. இதில் 2,300 தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.