நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பணவியல் கொள்கைகளை கடுமையாக்காமல், வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளை அதிகரிக்கவில்லை என்றால், நாட்டில் பணவீக்கம் 100வீதத்தை கடந்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பாக மின்சாரம், டீசல்கூட இல்லாமல் நாடு இருந்தது என்றும் தற்போது நாம் எடுத்த முடிவுகளால் இந்த நிலைமையில் இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது 100 சதவீதம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையில் இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாங்கள் தற்போது ஒரு நிலையான நிலையில் இருக்கிறோம் என தெரிவித்த அவர், இதை வேறு விதமாக செய்திருக்கலாம் என்று கூறுபவர்களிடம் இதை செய்யும் முறை என்னவென்று கூறுமாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நிலைமையை உறுதிப்படுத்த சிறந்த வழி எது? என்றும் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் முன்னேறுவதற்கும் இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.