இந்தியா தலைமை ஏற்கும் காலகட்டத்தில் ஜி20 அமைப்பு, உலக அளவிலான மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டின் நிறைவு கூட்டத்தி; பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
அடுத்த ஒரு வருடத்தில் ஜி20 நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தியா செயல்படும் என்றும் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஜி20 மாநாட்டை உலகளவிலான மாற்றத்திற்கான காரணியாக உருவாக்குவோம் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையில், எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. இதன் படி, அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.