தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து இளைஞர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலின் போது 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
13 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களில் இருந்து மீண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரித்திரியாவைச் சேர்ந்த புகலிடம் கோரி வந்த 27 வயது இளைஞரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிகாரிகள் அருகிலுள்ள கட்டடத்தை சோதனையிட்டபோது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் அவர் இருப்பதைக் கண்ட பொலிஸார் அவரை கைது செய்தனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். அங்கு அவர் குறிப்பிடப்படாத காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெளிநாட்டினர் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொலிஸ்துறை ஒரு அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
நகரத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக மேயர் மார்கஸ் ஹூஸ்லர் கூறினார்.
ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பயங்கரமான இந்த செய்தி என்னை உலுக்கியது. கொல்லப்பட்ட சிறுமிக்கு இரங்கல் தெரிவிக்கிறேன், காயமடைந்த சிறுமி குணமடைவாள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அனைத்து பின்னணிகளையும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இல்லர்கிர்ச்பெர்க் நகரம், 5,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நகரம் ஆகும்.