உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் ‘கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம்’ கைது செய்யப்பட்டதாக இன்டர்போல் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சூடானில் வைத்து எரித்திரியா நாட்டைச் சேர்ந்த தப்பியோடிய கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம், ஜனவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சக அதிகாரி சயீத் அப்துல்லா அல்-சுவைடி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
‘எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகளை லிபியா வழியாகவும் ஐரோப்பாவிற்கும் சட்டவிரோதமாக நகர்த்திய ஐரோப்பாவுக்கான மிக முக்கியமான கடத்தல் பாதைகளில் ஒன்றை நாங்கள் இப்போது மூடிவிட்டோம்’ என்று அல்-சுவைடி மேலும் தெரிவித்தார்.
‘ஹப்தேமரியம், இப்போது பணமோசடி குற்றத்திற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் விசாரணையை எதிர்கொள்வார், மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வழக்கு முடிக்கப்பட்ட பிறகு அவரை நாடு கடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்வார்கள்’ என மேலும் கூறினார்.
எத்தியோப்பியா மற்றும் நெதர்லாந்தின் இரண்டு இன்டர்போல் ரெட் நோட்டீஸ்களுக்கு உட்பட்ட ஹாப்டெமரியம், லிபியாவில் ஒரு முகாமை நடத்தி வருகிறார். அங்கு ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கிழக்கு ஆபிரிக்க குடியேறிகள் கடத்தப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டு மிரட்டி பணம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த, 2019ஆம் ஆண்டு முதல் இன்டர்போலின் ரேடாரில் ஹப்தேமரியம், குறிப்பாக புலம்பெயர்ந்தோரை கொடூரமான மற்றும் வன்முறையாக நடத்துவதற்கு புகழ் பெற்றவர் என இன்டர்போல் தெரிவித்துள்ளது.
2020இல் எத்தியோப்பியாவில் ஹப்டெமரியம் கைது செய்யப்பட்டார், ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு காவலில் இருந்து தப்பினார், பின்னர் அவர் இல்லாத நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.