பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புஹின்னவிடம் விளக்கம் கோரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு வழங்கிய பணிப்புரை தொடர்பிலேயே இவ்வாறு விளக்கம் கோரப்படவுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை அறிவிட வேண்டாம் என நேற்றைய தினம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் அலுவலர்களுக்கு அத்தகைய பணிப்புரை விடுக்க தேர்தல் ஆணைக்குழுவன்றி வேறு எவருக்கும் அதிகாரமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் குறித்த பணிப்புரை மீளப்பெறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்த பணிப்புரை குறித்து அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.