நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற புர்கினா பாசோவின் இராணுவத் தலைவர்களின் கோரிக்கையை பிரான்ஸ் ஏற்றுள்ளது.
புர்கினா பாசோ அரசாங்கம் அதன் துருப்புக்களை வெளியேறுமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அனுப்பியதை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார்.
‘இந்த கோரிக்கையை மதிப்பதன் மூலம் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நாங்கள் மதிப்போம்’ என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது இஸ்லாமிய கிளர்ச்சியுடன் போராடி வரும் புர்கினா பாசோ தன்னை தற்காத்துக் கொள்ள விரும்புவதாக கூறுகிறது.
புர்கினா பாசோவில் தற்போது 400 பிரான்ஸ் சிறப்புப் படைகள் உள்ளன, அவர்கள் வெளியேற ஒரு மாதமே உள்ளது.
வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டிற்கான தனது தூதரையும் ஆலோசனைக்காக திரும்ப அழைப்பதாகக் கூறியது.
நாட்டின் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து தூதுவர் கருத்து தெரிவித்ததற்காக அவரை மாற்ற வேண்டும் என்று புர்கினா பாசோவின் இராணுவ ஆட்சிக்குழு கோரியது.
கடந்த ஆண்டு பிரான்ஸ் துருப்புக்கள் அண்டை நாடான மாலியை விட்டு வெளியேறினர், அங்கு அவர்கள் ஜிஹாதிஸ்டுகளுடன் சண்டையிட்டு எட்டு ஆண்டுகள் போராடினர்.
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பல முன்னாள் காலனிகளுடன் பிரான்ஸ் நெருங்கிய இராணுவத் தொடர்புகளை வைத்திருக்கிறது மற்றும் அவர்களில் பலருக்கு இப்போது நிறுத்தப்பட்ட ‘ஆபரேஷன் பர்கேன்’ கீழ் பிராந்தியம் முழுவதும் செயற்படும் ஜிஹாதிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சுமார் 3,000 பிரான்ஸ் வீரர்கள் இன்னும் மேற்கு ஆபிரிக்காவில், பெரும்பாலும் நைஜர் மற்றும் சாட் நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புர்கினா பாசோ ஒரு தசாப்த கால கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
செப்டம்பரில் புர்கினா பாசோவில் கேப்டன் இப்ராஹிம் ட்ரேரே அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, அவர் ரஷ்ய கூலிப்படையினருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கலாம் என்று பரவலான ஊகங்கள் உள்ளன.
ஜிஹாதிகளிடமிருந்து பிராந்தியத்தை மீண்டும் வெல்வதாகவும், ஜூலை 2024இல் ஜனநாயக தேர்தல்களை நடத்துவதாகவும் கேப்டன் ட்ரேரே உறுதியளித்துள்ளார்.