ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் மக்களின் அடிப்படை உரிமையை முடக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டினார்.
தேர்தலை பிற்போட மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன என்றும் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நிச்சயம் இடம்பெறும் என்றும் கூறினார்.
இதேவேளை தேர்தல் தொடர்பாக பொய்யான செய்திகளை மாத்திரம் வெளியிடுவதை அரசாங்கம் பிரதான செயற்பாடாக கொண்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து பி.எஸ்.எம்.சார்ல்ஸ் பதவி விலகியமை தேர்தலை நடத்த ஒரு தடையாக அமையாது என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் அனைத்து தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும் மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலடி கொடுப்பார்கள் என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.