இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ரஞ்சி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேரில் மிட்செல் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் கோன்வே 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வொஷிங்டன் சுந்தர் 50 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டப்ஃபி மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டேரில் மிட்செல் தெரிவுசெய்யப்பட்டார்.