பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலகின் மிகப்பெரும் நிறுவனங்களும் நாடுகளும் முன்வந்துள்ளன.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் , துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 874,000 பேருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சூடான உணவை வழங்க 77 மில்லியன் டொலர்களைக் கோருகிறது.
பிராந்தியத்தின் கடுமையான குளிர்ந்த குளிர்கால நிலைமைகளில் சூடான உணவு தேவைப்படுபவர்களில் சிரியாவில் புதிதாக இடம்பெயர்ந்த 284,000 மக்களும் துருக்கியில் 590,000 பேரும் அடங்குவர், இதில் 45,000 அகதிகள் மற்றும் 545,000 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர்.
இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆகியவை துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விளையாட்டு கூட்டமைப்புகளாக மாறியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் அறிவித்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கைக்கு ஆதரவாக ஆரம்ப தொகையாக 200,000 யூரோக்களை ஐரோப்பிய கால்பந்து அமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான அதன் அறக்கட்டளை, நன்கொடையாக வழங்கும் என அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் பிரீமியர் லீக், ஒரு மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கத்தின் அதிர்வுகளுக்குப் பிறகு 100 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில், துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் வெள்ளிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 20,213க்கும் அதிகமாக உயர்ந்தது, சிரியாவில் 3,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கங்களுக்குப் பிறகு சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.