உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன.
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில் தான் அந்தக் கொடியச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது.
8.45 மணி முதல் 9 மணிவரையான அந்த நேரப்பகுதிக்குள் இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து- நூற்றுக்கணக்கானோர் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.
கணவன் மனைவியை இழந்தார்…
மனைவி கணவனை இழந்தாள்…
பெற்றோர் பிள்ளைகளை இழந்தனர்…
பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர்…
உடன் பிறந்தோர் இறந்தனர்…
உறவினர்களும் இறந்தனர்…
ஆம். கனவில் கூட கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத கண்மூடித் தனமான இந்தத் தாக்குதல், இன்றுவரை இலங்கை மக்களின் மனங்களில் அறா ரனமாக இருந்துக் கொண்டுதான் உள்ளது.
இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்கே காரணமான இந்தத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் கடந்துவிட்டன.
நாட்களும் நகர்ந்து விட்டன.
ஆனால், பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நீதியோ, இன்னும் பகல் கனவாக மட்டுமே நீடித்து வருகின்றது.
சுவர்களிலும், தேவாலய கதிரை மேசைகளிலும் படிந்திருந்த அந்த இரத்தக்கரைகள், இனியொருத் தாக்குதல் இதுபோன்று இனிமேல் வேண்டாம் என்ற கசப்பானச் செய்தியையே வெளியுலகுக்கு காண்பித்து நிற்கின்றது.