”உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பில் முன்னெடுத்துவரும் அரசியல் நாடகத்தினை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும்” என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ’உள்ளூராட்சிமன்றங்களுக்கு மக்கள் நான்கு வருடம் ஆணை வழங்கியுள்ளார்கள். எனினும் விரும்பிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்வதற்கான உரிமையை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதுவொரு அடிப்படை மனித உரிமை மீறலாகும். இறைமையுள்ள அரசாங்கமானது மக்கள் ஆணையை மதிக்கவேண்டும்.நான்கு வருடம் உள்ளூராட்சிமன்றங்களுக்கு வழங்கிய மக்கள் ஆணையை இலங்கை அரசாங்கம் மீற முற்படும் நிலையென்பது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
மக்கள் ஆணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடாத்துவதே அந்தஆணைக்கு கொடுக்கும் மதிப்பாகும்.இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சதிவலையில் சிக்கிவிடாமல் தேர்தல்களை நடாத்துவதற்கான அழுத்தங்களை மக்கள் விடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன்” என்றார்.
அத்துடன் விவசாயிகளின் விவசாயத்திற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் நெல்லிற்கான விலையினை அரசாங்கம் அதிகரிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மிகவும் கஸ்டமான நிலையில் உள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் விவசாயிகளைத் தொடர்ந்து ஏமாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
தற்போது அறுவடைகாலம் தொடங்கியுள்ளதன் காரணமாக உடனடியாக நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவேண்டும்.
அத்துடன் நெல்லின் விலையானது அதிகரிக்கப்படவேண்டும்.இதேபோன்று கிரிமிநாசினிகளுக்கான விலைகளும் குறைக்கப்படவேண்டும். இன்றுள்ள சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகத்தில் ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு ஒன்றரை இலட்சம் ரூபா செலவு ஏற்படுகின்றது.விவசாயிகளின் செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக அரசாங்கம் இதனை கவனத்தில்கொண்டு நெல்லிற்கான விலை அதிகரிப்பு தொடர்பில் விவசாயிகள் விடுத்துவரும் கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.