தெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வார நாடாளுமன்ற அமர்வை நோக்கும் போதும் பசில் ராஜபக்சவின் கும்பல் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேலும் இரு வாரங்களுக்கு இழுத்தடிப்புச் செய்யும் பிரயத்தனத்தை முன்னெடுத்தது.
இருப்பினும் எதிர்க்கட்சியில் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் எதிர்க்கட்சியின் முயற்சியால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகலருக்கும் நன்றி.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிலிருந்து விலகி எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் இந்த பொருளாதார சீரழிவுக்கான காரணங்களை கண்டறிய எதிர்க்கட்சியின் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபித்து இதனை முன்கொண்டு செல்வோம்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்கான காரணங்களை கண்டறியும் அரசாங்கத்தின் தெரிவுக்குழுவிற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம்.
மொட்டு கட்சியையும் இன்னும் தெளிவாக குறிப்பிடுவதாக இருந்தால் பசில் ராஜபக்ச குழுவினரை சுத்தப்படுத்த எடுக்கும் இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.