யாழ்ப்பாணத்தில் முதியவரைக் கடத்திச் சென்று அவரிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள காணியொன்றை விற்பனை செய்யும் விதமாக அப்பெண்ணிடம் இருந்து முற்பணமாக 13 இலட்ச ரூபாய் பணத்தினைப் பெற்றுள்ளார்.
எனினும் குறித்த காணியைப் அப்பெண்ணுக்கு விற்பனை செய்யாமலும் கொடுத்த பணத்தினை திருப்பிக் கொடுக்காமலும் முதியவர் நீண்டகாலமாக இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை , வாகனம் ஒன்றில் நான்கு ஆண்களுடன் முதியவரின் வீட்டுக்கு அருகில் சென்று முதியவரை வாகனத்தில் கடத்திச் சென்று , தாக்கி , அவரிடமிருந்து 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு பின்னர் முதியவரை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் முதியவர் தன்னைக் கடத்தி பணம் பறித்தவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இம்முறைப்பாட்டின் பிரகாரம் அப் பெண் உட்பட மூவரை மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்த பொலியார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.