இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் பதவி விலகியதை அடுத்து, பாரிய சவால்களுக்கு மத்தியில் பதில் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை வாக்குகளைக் பெற்று, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது நபராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அரசானது என்றுமே சந்திக்காத பாரிய பொருளாதார நெருக்கடியை கடந்த 2022 ஆம் ஆண்டு சந்தித்தது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி பீடத்தில் இருந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் தவறான ஆட்சி முறையும் ஊழலுமே காரணம் எனத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல், நாட்டில் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்தன.
இதுவே இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த ஆரம்பப் புள்ளியாகவும் அமைந்திருந்தது.
கொழும்பு காலி முகத்திடலில் அன்று ஒன்று கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் மாத்திரமன்றி, அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தையே பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது சுமார் 100 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு ஜுலை 9 ஆம் திகதியன்று, வரலாறு காணாத வகையில், இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகரை முற்றுகையிட்டு, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரசின் பிரதான அலுவலகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன் விளைவாக, கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையில் இருந்து தப்பித்து மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூரில் தஞ்சமடைந்த நிலையில், ஜுலை 14 ஆம் திகதி தனது ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பொருளாதார ரீதியாக சரிவடைந்த இலங்கைத் தீவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு அமைவாக, 1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக அரியாசனம் ஏறினார்.
ஜுலை 21 ஆம் திகதி இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியாகவும் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் பதவியேற்று, 30 வருட கால ஜனாதிபதிக் கனவையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நனவாக்கிக் கொண்டார்.
பதவியேற்று சில நாட்களிலேயே கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற்றுவந்த மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்திய இவர், நாட்டில் நிலவிவந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் படிப்படியாக தீர்வுக்காண நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவர் எடுத்த தொடர் முயற்சிகளின் பலனாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கு உதவ தற்போது பச்சைக் கொடிக் காட்டியுள்ளன.
அத்தோடு, சர்வதேச நாடுகளுக்கு இவர் விஜயம் மேற்கொண்டு கோரிய உதவிகளின் பலன்களும் இலங்கைக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் நாட்டில் நீடித்துவந்த வரிசை யுகம், நீண்ட நேர மின்வெட்டு, உரப் பிரச்சினை உள்ளிட்ட மக்களின் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
அத்தோடு, மக்கள் தொடர்ந்தும் இதேபோன்று ஒத்துழைப்பை வழங்கினால் 2025 ஆம் ஆண்டிலேயே நாட்டை பிரச்சினைகளில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்றும் 2048 ஆம் ஆண்டிலேயே நாட்டை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக மாற்றிவிட முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மேலும், நீண்ட காலமாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கானத் தீர்வினைக் காணவும் இவர் முயற்சிக்காமல் இல்லை.
நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால், தமிழ் மக்களுக்கான சமஸ்டி ரீதியான அரசியல் தீர்வொன்றை வழங்கத் தயார் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு வழிகளிலும் ஏதோ ஒரு முறையில் அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண்பதில் ஜனாதிபதி தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அதேநேரம், கடந்த ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ராஜபக்ஸவினரை தொடர்ச்சியாக காப்பாற்றிக் கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் இவர் முகம் கொடுக்காமல் இல்லை….
எது எவ்வாறாயினும், தாங்கள் அன்றாடம் எதிர்க்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கி, ஊழல் குற்றவாளிகளுக்கும், நாட்டை வங்குரோத்து அடையச் செய்த தரப்பினருக்கு எதிராகவும் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான், ஜனாதிபதியிடம் மக்கள் கோரும் சாதாரண கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதனை உணர்ந்து, அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குக்கும் விரைவிலேயே தீர்வொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்குவாராயின், இலங்கை வரலாற்றில் பொன் எழுத்துக்களுடன் நீங்கா இடம்பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை!
- இளங்கோ பாரதி