புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும்.
தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல் நவயுக மனிதன்வரை அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
போர்க்காலச்சூழல் , இயற்கை அனர்த்தங்கள், அரசியல் ஸ்திரமற்ற தன்மை போன்றவை பொதுவாக மனிதர்கள் புலம்பெயர்வதை ஊக்குவித்து வரும்நிலையில் வறுமை , பிணி , பஞ்சம் போன்றவை மற்றொரு வகையில் மனிதர்களைப் புலம்பெயரச் செய்து வருகின்றன.
மனிதர்கள் அனைவரும் வளமாக வாழ விரும்புவது இயற்கையான ஒன்றாகும்.
இவ்வாறு வளமான வாழ்வைத்தேடிஓடும் மனிதர்கள் புலம்பெயர்தலை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். முறையான, பாதுகாப்பான புலம் பெயர்வால் சமூகத்தில் பொருளாதார சுபீட்சம் உருவாகும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.
இலங்கையில் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக அண்மைக்காலத்தில் மக்கள் புலம்பெயர்ந்து செல்வதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கடந்த வருடம் (2022) மாத்திரம் 3 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பான வேலைகளுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த மனித வள வெளியேற்றமாகும். மேலும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காகக் கடந்த ஜுன் மாதத்தில் மாத்திரம் முப்பதாயிரம் (30000) விண்ணப்பங்கள் நேரலைமூலம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாதுகாப்பற்ற, முறைசாராத புலம் பெயர்வினால் புலம்பெயர்வோர் அனுபவிக்கின்ற சிரமங்களும் ஊடகங்களின் பேசுபொருளாகியுள்ளன.
இவ்வாறு தேசியரீதியில் கவனக்குவிப்பைக் கொண்டுள்ள புலம்பெயர்வு தொடர்பாக, நாட்டு மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதும், பாதுகாப்பற்ற புலம்பெயர்வு தொடர்பாக , சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வெளிநாடுகளுக்கு இலங்கையர்கள் புலம்பெயர்ந்து செல்வது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிகழ்கிறது.
- நிபுணத்துவம் சார்ந்த கற்கைநெறிகளைப் பயில்வதற்காக…
- தகைமைசார் தொழில் வாண்மையுடையோர் தமது தொழில் வாண்மைக்குத் தகுந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக…
- தொழில்சார் சிறப்புத்திறன் பெற்றிருப்போர் தமது திறமைக்குத் தகுந்த தொழில் வாய்ப்பினை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தூடாகப் பெற்று உரிய தொழில்களில் இணைந்து கொள்வதற்காக…
- உள்நாட்டில் தொழில் வாய்ப்பு இல்லாமை அல்லது ஊதியம் மிகக்குறைந்த மட்டத்தில் காணப்படுதல் போன்ற காரணங்களுக்காக குறைந்த தொழிற்பயிற்சி உடையவர்களும் வீட்டுப் பணியாளர்களும் வெளிநாடுகளில் வேலைபெற்றுத் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக…
- வெளிநாடுகளில் வசிக்கும் தமது குடும்பத்தவர்களுடன் இணைந்து கொள்வதற்காக…
- பல்வேறு காரணங்களின் நிமித்தம் பிறநாடுகளில் புகலிடம் கோருவதற்காக…
இவ்வாறு புலம்பெயரும் இலங்கையர்கள் தமது புலம்பெயர்வின் முன்னரும், புலம்பெயரும்போதும், புலம்பெயர்ந்த பின்னரும் கடைப்பிடிக்கவேண்டிய சில வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருப்பது எதிர்காலத்தில் அவர்கள் சந்திக்கக்கூடிய பாதமான நிலைமைகள் , மற்றும் இடர்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த உபாயமாக அமையும்.
வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் ஒவ்வொருவரும் தமது பெயரில் செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றை வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
கற்கைநெறியொன்றைக் கற்பதற்காகப் புலம்பெயர்ந்து செல்லவிருக்கும் ஒருவராயின் அக்கற்கைநெறி தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தனது கைவசம் வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
தொழில் பெற்றுச் செல்பவராக இருப்பின் சேவை ஒப்பந்தம் / தொழில் உடன்படிக்கை , தொழில் விசா அனுமதிப்பத்திரம் மற்றும் வேலை அனுமதிப்பத்திரம் இவற்றோடு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்ததற்கான ஆவணங்களையும் தனது கைவசம் வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
மேலும் பயணதினத்தன்று பயணிக்கும் நேரத்திற்குக் குறைந்த பட்சம் மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருவதன்மூலம் தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஒருவர் புறப்படுவதற்கு முன்னர் போதிய ஓய்வு எடுத்தலையும் சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
புறப்படுமுன்னர் , விமானப் பயணச்சீட்டு, கடவுச்சீட்டு , விசா ஆவணங்கள், விமானப்பயணம் பற்றிய தகவல்கள், மற்றும் அனுசரணையாளர் பற்றிய தகவல்கள் , விமான நிலையத்தில் தன்னை வரவேற்கக் காத்திருக்கும் நபர் பற்றிய தகவல்களையும் இலகுவில் எடுக்கக்கூடியதொரு இடத்தில் வைத்துக் கொள்வதும் அவற்றை மறந்துவிடாது கையோடு கொண்டு செல்வதும் அவசியமாகும்.
இதன்மூலம் வீண் பதற்றமடைவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். இதேவேளை தான் எடுத்துச் செல்கின்ற முக்கிய ஆவணங்களின் ஒரு பிரதியை வீட்டில் வைத்துவிட்டுச் செல்வதும் இழப்புகள் நேருமிடத்து அவற்றை ஈடுசெய்வதற்கு உறுதுணையாக அமையும்.
மேலும் பயணத்தின்போது சாதாரண ஸ்மார்ட் தொலைபேசியொன்றை எடுத்துச் செல்வதும் , அதனைச் செயற்படுத்தக்கூடிய அடிப்படை அறிவைப்பெற்றிருப்பதும் மிகவும் அவசியமாகும்.
அத்துடன் பயணம் செய்ய இருப்பவர் தாம் சென்றடைய இருக்கும் நாட்டின் விதிமுறைகளையும் சட்டங்களையும் பற்றித் தெரிந்து வைத்திருப்பது புலம் பெயரும் நாட்டில் தேவையற்ற பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்காமல் . வாழ்வதற்கு உறுதுணையாக அமையும்.
புலம் பெயர்ந்து செல்வோர் தாம் செல்லும் நாட்டில் வாழ்வதற்குத் தேவையான மொழியறிவைப் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்.
வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்காகச் செல்கின்ற ஒருவர் அக்கற்கைநெறியைப் பயில்வதற்குத் தேவையான மொழியறிவைத் தான் கொண்டுள்ளதை IELTS, or TOEFL போன்ற பரீட்சைகளூடாக உறுதி செய்த பின்னரே கற்பதற்கான அனுமதி வழங்கப்படுவதால் மொழியறிவு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகும்.
அதேபோன்று தொழில்பெற்றுச் செல்லும் வாண்மையாளர்களும் உரிய மொழித்தேர்ச்சியைத் தாம் அடைந்துள்ளதை உறுதிசெய்த பின்னரே தொழிலுக்கான அனுமதி பெறுவதால் உரிய மொழித்தேர்ச்சியைக் கொண்டிருப்பர்.
அத்துடன். திறன்சார்ந்த பணிகளில் இணைத்துக் கொள்ளப்படுவதற்காக புலம் பெயரும் ஊழியர்களுக்கு உரிய மொழியறிவைப் பெற்றுக்கொடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்து வருவதால் குறைந்த பட்ச மொழியறிவையாவது அவர்கள் பெற்றிருப்பர்.
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தூடாக வேலை வாய்ப்பினைப்பெற்று புலம் பெயர்ந்து செல்லும் வீட்டுப்பணியாளர்கள் மற்றும் குறைந்த தொழிற்பயிற்சி உடையவர்களும் தாம் பணிபுரியவுள்ள நாட்டினது அடிப்படை மொழியறிவைப் பெற்றதன் பின்னரே புலம் பெயர்கின்றனர் என்பதால் மொழிசார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் மிகவும் அரிதாகும்.
எனினும் பதிவுசெய்யப்படாத முகவர்களூடாக வெளிநாடுகளுக்கு வேலைபெற்றுச்செல்லும் பெண் ஊழியர்கள் மொழியறிவின்மையால் தாம் பணிபுரியும் இடங்களில் பல்வேறுவகையான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
இதுவரை பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பாக எமது கவனத்தைச் செலுத்தினோம்.
இப்போது பாதுகாப்பற்ற புலம்பெயர்வு எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பார்ப்போமானால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளால் கவரப்பட்டோர் இவ்வாறான சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.
இவர்கள் பணம்பறிக்கும் மோசடிக்காரர்களிடம் சிக்கி பெருந்தொகையான பணத்தை இழப்பதோடு, ஆட்கடத்தல்காரர்களின் தவறான வழிகாட்டுதல்களினால் வெளிநாடுகளில் அநாதரவாகக் கைவிடப்பட்டு பெருந்துயரை அனுபவிக்கின்றனர்.
மேலும் சிலர் பதிவுசெய்யப்படாத முகவர்களின் வார்த்தைகளை நம்பி பிழையான தொழில் கொள்வோரிடம் பணிக்கு அமர்த்தப்பட்டு தாங்கொணாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இது இன்று பாரிய சமூக அவலமாக உருவெடுத்துள்ளது.
முறையற்ற புலம்பெயர்வினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பினால் (IOM ) வெளியிடப்பட்ட அறிக்கையில் 2018 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு முயன்றவர்களில் 2299 பேர் மத்தியதரைக்கடலில் மரணித்துள்ளனர் அல்லது காணாமற்போயுள்ளனர் என்ற தகவலைப் பதிவு செய்துள்ளது.
ஆட்கடத்தற்காரர்களின் வழிகாட்டலில் தரைவழியூடாகப் பயணம் மேற்கொண்ட அநேகம் பேர் தமது பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர் அல்லது நச்சு வாயுக்களைச் சுவாசித்ததனால் சுகவீனமுற்று அல்லது இடருக்குள்ளான வாகனங்களில் கைவிடப்பட்டுள்ளனர்.
என்றும் முறையற்ற புலம்பெயர்வின்போது புலம்பெயர்பவர்கள் , மிக நெருக்கமாக , கடல்வழிப் பயணத்திற்குப் பொருத்தமற்ற படகுகள் மூலமோ , பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமற்ற பாதுகாப்பற்ற வாகனங்களிலும் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முறையற்ற புலம்பெயர்வின்போது புலம்பெயர்பவர்கள் அவர்களின் பயணவழியில் பல்வேறு மோசமான பேர்வழிகளினால் சுரண்டலுக்கும் துஸ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுவதாகவும்,ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் அநேகமாக பயணத்தின் அனைத்து கட்டங்களுக்கும் அதிகமான பணத்தொகையைக் கோருவதுடன் புலம்பெயர்பவர்களின் பணம் முடிவடைந்ததும் அவர்களை அடிமைகள் போன்று நடத்துவதோடு , பெண்களை பலாத்காரமாக விபச்சாரத்திலும் ஈடுபடுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் முறையற்ற விதத்தில் புலம்பெயர்பவர்களை அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்கள் பனிக்காலத்தில் அல்லது கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ள காலத்தில் அவர்களை ஏற்றிச் செல்வதால், காலநிலை மாற்றங்கள் பற்றி அறிந்திராத புலம்பெயர்பவர்கள் ஆபத்து நிலைக்கு உள்ளாகின்றனர் என்றும் போதிய உணவு , தங்குமிடவசதிகள் , உடலை வெப்பமாக்கிக் கொள்வதற்கான வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவர்கள் தனிமைக்கு உள்ளாகுதல், உளரீதியான அழுத்தம் போன்றவை காரணமாக தற்கொலைக்குத் துணியும் அபாயமும் உள்ளது என்றும் அவ்வறிக்கைகள் கூறுகின்றன.
எனவே, புலம் பெயரும் எண்ணங்கொண்ட அனைவரும் இவ்விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து தமக்கான சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
யாரேனும் நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ உங்களுடைய கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைக்கும் முன் அந்நிறுவனத்தின் சட்டபூர்வத் தன்மை பற்றிக் கவனம் செலுத்தவேண்டும்.
முகவர் நிலையத்தின் சட்டபூர்வத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு செல்லுபடியாகும் உத்தரவாதம் (Job Order) பற்றி அறிந்து கொள்ள www.sibfe.lk என்ற இணையத்தளம் 1989 என்ற அவசர அழைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி தெளிவுபெற முடியும்.
மேலும் புலம் பெயர்தலுக்கான சர்வ தேச அமைப்புடன் (IOM) தொடர்பு கொண்டு அவர்களால் வழங்கப்படும் சேவையையும் பெற்றுக் கொள்ள முடியும். ( அவசர அழைப்பு இலக்கம் +94774410086 )
இன்று இலங்கை பாரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் புலம்பெயர்பவர்களால் வெளிநாடுகளிலிருந்து வருமானமாகக் கிடைக்கப்பெறும் அந்நியச்செலாவணி நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பெரிதும் உதவும் என்ற நிலையில் அரசாங்கம், இதனை ஊக்குவித்து வருகிறது.
இலக்கு எவ்வளவுதான் உயர்வானதாக இருப்பினும் அதனை அடையும்வழி நேரியதாக இருக்கும் பட்சத்திலேயே உயரிய பலாபலன்களைப் பெறமுடியும்.
அந்தவகையில் இலங்கையர்களாகிய நாம் பாதுகாப்பான புலம் பெயர்வை மாத்திரமே மேற்கொள்வோம் என உறுதி பூண்டு எமது தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
– இளங்கோ பாரதி