வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தென்னிலங்கையில் சரத் வீரசேகர, உதயகம்பன்பில, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை,
மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது.
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தினை முழுமையான அமுல்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்ல முடியும்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம்.
அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை நாங்கள் விரும்புகின்றோம் என்ற வகையில் இந்திய பிரதமர் தனது பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஜனாதிபதி மகாநாடு ஒன்றை நடாத்தியுள்ளார். அதன் ஊடாக அமைச்சரவை உபகுழுவினை நியமித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.