ஜனாதிபதியான பின்னரே நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நினைத்தால், அது நாட்டுக்கு உகந்த செயற்பாடாக அமையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“19 ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்காக, அப்போது இருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கே சென்று நான் ஆதரவு கோரியிருந்தேன்.
நாடாளுமன்றில் ஆளும் – எதிரணியினர் கூடும் மண்டபத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தோளில் கையைப் போட்டு, சிலருடன் நகைச்சுவையாக உரையாடி, 19 இற்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தேன்.
இந்த நிலையில், யாரோனும் ஒருவர்; தான் ஜனாதிபதியான பின்னர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என நினைத்தால், அது நாட்டுக்கு உகந்த செயற்பாடாக அமையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.