தையிட்டியில் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள விகாரைக்கு எதிராக சிறிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சிங்கள யாத்திரிகர்கள் அல்லது அதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் யுத்த வெற்றி வாதத்தின் யாத்திரிகர்கள் அந்த இடத்துக்கு வருவார்கள்.அவர்களுடைய கவனத்தை ஈர்த்து நமது எதிர்ப்பை காட்டுவதே முன்னணியின் போராட்டத்தின் நோக்கம்.அது ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம்தான். பெருந்திரள் போராட்டம் அல்ல.மக்கள் மயப்பட்ட போராட்டமும் அல்ல.ஏனைய தமிழ்க் கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொள்வது குறைவு. ஆனாலும் முன்னணி போராடுகிறது.அது தேவை. அண்மை மாதங்களாகத் தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர்முனை போல முன்னணியை காணப்படுகின்றது.அது தமிழ் அரசியலை சிறிய போராட்டங்களின் மூலம் நொதிக்கச் செய்கின்றது. முன்னணியை பின்பற்றி ஏனைய கட்சிகளும் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. குருந்தூர் மலையில் அதுதான் அண்மையில் நடந்தது.ஏனைய இடங்களிலும் அது நடக்கும். இந்த விடயத்தில் முன்னணி ஒரு முன்மாதிரியைக் காட்டுகின்றது.
எனினும் முன்னணியும் ஏனைய கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் போராடிய போதிலும் அரசாங்கம் அதன் சிங்கள பொருத்தமயமாக்கலின் வேகத்தை நிறுத்தவில்லை. தையிட்டி விகாரை அகற்றப்படவில்லை. குருந்தூர் மலை விவகாரம் முடிவுக்கு வரவில்லை. வெடுக்குநாரி மலையிலும் பிரச்சினை தீரவில்லை. மட்டக்களப்பில் மே ச்சல் தரை பிரதேசத்தில் மீண்டும் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர தீவுப்பகுதியை ஒரு புதிய நிர்வாக வலையமாக அரசாங்கம் அறிவிக்கப் போவதாக முன்னணி கூறுகின்றது. அண்மை நாட்களில் மட்டும் தமிழர் தாயகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிலப்பறிப்பு முயற்சிகளும் சிங்கள பௌத்த மயமாக்கல் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவை யாவும் நமக்கு எதைக் காட்டுகின்றன?
தமிழ்க் கட்சிகளின் போராட்டங்கள் சரியாகவோ அல்லது பிழையாகவோ சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ கவன ஈர்ப்பாகவோ அல்லது குறியீட்டு வகைப்பட்டோ முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இந்தப் போராட்டங்கள் எதனாலேயும் சிங்கள பௌத்த மயமாக்கலை,நிலப்பறிப்பை நிறுத்த முடியவில்லை என்பதைத்தான் அண்மைகாலம் நமக்கு உணர்த்துகின்றது. போராட்டம் சரி.ஆனால் அந்தப் போராட்டம் அரசாங்கத்துக்கு தாக்கமான விதத்தில் வலியை ஏற்படுத்தவில்லை. அல்லது அனைத்துலக சமூகத்தை தாக்கமான விதத்தில் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாடு அனைத்துலக நாணய நிதியத்திடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்,மேற்கு நாடுகள் இந்தியா போன்றன தொடர்ந்து அரசாங்கத்தை பாதுகாத்து வரும் ஒரு பின்னணியில், அரசாங்கம் அதன் சிங்கள பௌத்த மயமாக்கலை நிறுத்தவேயில்லை என்றால் அது எதைக் காட்டுகிறது?
முதலாவதாக,ரணில் விக்கிரமசிங்கவுக்கு அது தேவையாக இருப்பதைக் காட்டுகின்றது.அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இடையே தன்னுடைய சிங்கள பௌத்த வாக்குவங்கியை அவர் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அவர் ராஜபக்சங்களில் தங்கியிருக்கும் ஒரு பொது வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டால் தமிழ்மக்களின் வாக்குகள் அவருக்கு பெரிய அளவில் கிடைக்காமல் போகலாம் என்ற சந்தேகம் அவருக்கு உண்டு.எனவே ராஜபக்சக்களின் பாணியில் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளை கவர்வது என்று அவர் முடிவெடுத்து விட்டார். அதனால் சிங்கள பௌத்த மயமாக்கலை தீவிரமாக முன்னெடுக்கின்றார். அதாவது தேர்தல் நோக்கு நிலையில் இருந்து அவர் சிங்கள பௌத்த மயமாக்கலை நிறுத்தவில்லை என்று பொருள்.
இரண்டாவதாக, தமிழ்க் கட்சிகளால் அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் போராட முடியவில்லை என்பதும் ஒரு காரணம்.தமிழ்க் கட்சிகள் குறிப்பாக ,முன்னணி முன்னெடுக்கும் பெரும்பாலான போராட்டங்கள் குறியீட்டு வகைப்பட்டவை.அதிலும் குறிப்பாக இப்போராட்டங்களில் முன்னணி பொலிஸோடு முட்டுப்படுகிறது.அது உணர்ச்சிகரமான ஒரு சூழலைத் தோற்றுவிக்கும்.அது தமிழ் எதிர்ப்பு அரசியலை நொதிக்கச் செய்யும். ஆனால் அரசாங்கத்துக்கு அது எந்தளவுக்கு வலியை உண்டாக்கும்?நாட்டின் பொருளாதாரத்தை அது பாதிக்குமாக இருந்தால் அல்லது நாட்டின் கீர்த்தியை அது கெடுக்குமாக இருந்தால் அல்லது நிர்வாகத்தை அது முடக்குமாக இருந்தால்;வெளிநாட்டுத் தூதரகங்களை உற்றுக்கவனிக்க வைக்குமாக இருந்தால் ஐநா போன்ற உலகப் பொது அமைப்புகளை உற்றுகேகவனிக்க வைக்குமாக இருந்தால்;அந்தப் போராட்டங்கள் அரசாங்கத்துக்கு வலியை உண்டாக்கக்கூடும்.
ஆனால் இப்பொழுது நடக்கும் பெரும்பாலான போராட்டங்கள் அத்தகையவை அல்ல.கடந்த வாரம் முல்லைத் தீவில் கொக்கு தொடுவாய் மனிதப் புதை குழிக்கு எதிராக நடந்த ஊர்வலம் அண்மை காலங்களில் நடந்த ஊர்வலங்களில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியது.அதுதவிர பெரும்பாலான ஏனைய போராட்டங்கள் சிறு திரள் போராட்டங்கள் அல்லது கவன ஈர்ப்புப் போராட்டங்கள் அல்லது தனிக்கட்சிப் போராட்டங்கள்தான்.இங்கேதான் பிரச்சனை இருக்கிறது. அவை பெருந்திரள் போராட்டங்களாக வடிவமைக்கப்படவில்லை.அவற்றை தொடர்ச்சியான பெருந்திரள் போராட்டங்களாக முன்னெடுக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்சியும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.ஒரு தனிக்கட்சி அதைச் செய்ய முடியாது என்பதைத்தான் கடந்த 14ஆண்டு கால அனுபவம் தமிழர்களுக்கு உணர்த்துகின்றது.
முன்னணி போராட்டத்தின் முழுப் பலனும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று நம்புகிறது. அது ஏனைய கட்சிகளை அரவணைத்துப் போராடத் தயார் இல்லை. ஏனைய கட்சிகளை ஏற்றுக் கொள்ளவும் தயார் இல்லை.அது அரசாங்கத்துக்கு எதிராக மட்டும் போராடவில்லை இந்தியாவுக்கு எதிராகவும் எனைய தமிழ் கட்சிகளுக்கு எதிராகவுந்தான் போராடுகின்றது. முன்னணியின் தலைவர்கள் விடும் எல்லா அறிக்கைகளிலும் அதைக் காணலாம். அவற்றில் சில சமயம் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை விடவும் சக கட்சிகளுக்கு எதிரான கருத்துக்கள்தான் அதிகமாக இருக்கும்.ஏனைய தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை துரோகிகள் அல்லது காட்டிக் கொடுப்பவர்கள் அல்லது வழுவழுத்தவர்கள் அல்லது சமரசவாதிகள் அல்லது ஒத்தோடிகள் பொய்யர்கள் நடிகர்கள் என்றெல்லாம் முன்னணி விமர்சித்து வருகின்றது. அவ்வாறு விமர்சித்துவிட்டு அந்தக் கட்சிகளை இணைத்துக் கொண்டு போராட முடியாது.அந்தக் கட்சிகளும் முன்னணியோடு விசுவாசமாக இணையப் போவதில்லை.இதனால் முன்னணியின் போராட்டங்கள் பெரும்பாலும் தனிக்கட்சிப் போராட்டங்கள்தான். மொத்தத்தில் முன்னணி ஒரு தனிக் கட்சியாகஉதிரி உதிரியாக தெட்டந் தெட்டமாக;சிறு திரள் போராட்டங்களைத்தான் முன்னெடுத்து வருகிறது. இப்போராட்டங்கள் அரச நிர்வாகத்தை முடக்கப் போதுமானவை அல்ல. அல்லது குறைந்தபட்சம் தையிட்டிக்கு வரும் சிங்கள யாத்திரிகர்களை தடுத்து நிறுத்தக்கூட முடியாத போராட்டங்கள்.
அதேசமயம் இச்சிறு போராட்டங்களைக் காட்டி ரணில் விக்கிரமசிங்க தனது சிங்கள பௌத்த வாக்குத் தளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். நான் கட்டிய விகாரைக்கு எதிராக அங்கே ஆர்ப்பாட்டம் நடக்கின்றது இங்கே ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று கூறி அவர் தன் வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்வார்.
அப்படிப் பார்த்தால் ஒரு மையத்தில் இருந்து ஒன்றிணைக்கப்படாத போராட்டங்கள் எதிரிக்கு வலியை உண்டாக்குவதற்கு பதிலாக எதிரிக்கு சாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தி வருகின்றன என்பதைத்தான் தொடரும் ஆக்கிரமிப்புகள் நமக்குக் காட்டுகின்றன.எனவே முன்னணியும் உட்பட ஏனைய கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.ஒன்றிணைந்த போராட்டங்கள் இல்லையென்றால் அரசாங்கம் இறங்கி வராது.ஒன்றிணைந்து போராட முடியவில்லை என்றால் அது அரசாங்கத்துக்கு சாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
முன்னணி பல விடயங்களில் முன் நின்று போராடுகிறது என்பது உண்மை. ஆனால் அப்போராட்டங்கள் தென்னிலங்கையில் சில இடதுசாரி கட்சிகள் அல்லது சிறிய செயற்பாட்டு அமைப்புக்கள் லிப்டன் சுற்று வளைவில் நடத்தும் போராட்டங்களை ஒத்தவைகளாக ஒருவித சடங்காக யாந்திரீக மானவைகளாள மாறக்கூடாது.அதுமட்டுமல்ல ஒரு புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் சுட்டிக் காட்டுவது போல, போராட்டம் என்பது ஒவ்வொரு நாளும் தெருவில் நிற்பது அல்ல.போராட்டம் என்பது போலீஸிற்கும் அதிரடிப்படைக்கும் எதிராக நெஞ்சை நிமித்திக்கொண்டு நிற்பது மட்டும் அல்ல.சுலோக அட்டைகளை ஏந்தியபடி வீதியோரங்களில் நிற்பது மட்டும் அல்ல.அது அதைவிட ஆழமானது.ஆக்கபூர்வமானது.போராட்டம் என்பது முதலாவதாக ஆக்கபூர்வமானது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் போராட்டத்தை இரண்டு தளங்களில் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது.ஒன்று தேசத்தைக் கட்டியெழுப்புவது.இன்னொன்று ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள். இந்த இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும்.அதை இன்னும் ஆழமான வார்த்தைகளிற் சொன்னால்,இவை இரண்டும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்பட முடியாதவைகளாகக் கட்டமைக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புக்கு எதிரான கட்டமைப்புகளை உருவாக்கும்பொழுது அவை தேச நிர்மாணத்துக்கான கட்டமைப்புகளாகவும் பரிணமிக்கும்.எனவே கட்டமைப்புகளை உருவாக்கிப் போராட வேண்டும்.மக்களைப் பெரிய திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும்.போராட்டம் என்பது எதிரிக்கு எதிரான எதிர்ப்பு மட்டும் அல்ல.அதைவிட ஆழமான பொருளில் தேசத்தை கட்டி எழுப்புவது தேசத் திரட்சியை பாதுகாப்பது.
மாறாக எதிர்த் தரப்பு எங்களுடைய கவனத்தை கலைக்க வேண்டும் என்பதற்காக அல்லது நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை நன்கு விளங்கிக் கொண்டு எங்களுடைய கவனத்தைச் சிதறடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பும்போது அதற்கு எதிர்வினை ஆற்றுவதே அதாவது ரியாக்டிவ் அரசியல் மட்டும் எதிர்ப்பு அரசியல் ஆகிவிடாது. அதைவிட ஆழமான பொருளில் ப்ரோ ஆக்டிவாக தமிழ்த் தரப்பு போராட்டத்துக்கு வேண்டிய கட்டமைப்புகளை;சுய பாதுகாப்பு கவசங்களை; தேச நிர்மானத்துக்கு தேவையான கட்டமைப்புகளை; நீண்ட கால நோக்கில் கட்டியெழுப்ப வேண்டும்.அப்பொழுதுதான் தொடர்ச்சியாக பெருமெடுப்பில் போராடலாம்.அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்கலாம். பொருளாதாரத்தை முடக்கலாம்.எதிர்ப்பு அரசியல் என்பது எதிர்ப்பது மட்டும் அல்ல; கட்டியெழுப்புவதுந்தான்.கட்டியெழுப்புவது என்பது கட்சியை அல்ல தேசத்தை.