முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் இன்று (18) பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜி. ஜயதிலக, 7 நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும்,
எனினும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள பௌத்த மத நடவடிக்கைகளுக்கு அவ்வாறான நிபந்தனைகளை விதிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
உதவிப் பணிப்பாளரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவு கோரியதை அடுத்து இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையினால் முரண்பாடுகள் ஏற்படுமென அஞ்சி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் அருண் சித்தார்த்தன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும்
பௌத்த தரப்பினருக்கு எந்த தடையும் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை.
அதேசமயம் பொங்கல் பண்டிகைக்கு கூடும் மக்கள் ஏனைய தரப்பினருக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என முல்லைத்தீவு பொலிஸாரின் ஊடாக உதவிப் பணிப்பாளர் ஆர்.ஜி.ஜயதிலக்க பொங்கல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
எனினும் அப்பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் “பௌத்தர் எழுக!” எனும் வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.