”ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருவதாக” நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் ”உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதனத்தைப் பற்றி தனது கருத்தைத் தெரிவிக்க உரிமை உண்டு.
அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவது சிறந்தது.
அதை விடுத்து வன்முறை, அச்சுறுத்தல்கள் அல்லது சட்டரீதியான மிரட்டல் உத்திகள் அல்லது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உணர்ச்சிபூர்வமான பதில்களைத் தூண்டும் வகையில் அவரது வார்த்தைகளைத் திரித்துக் கூறுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவறானது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனத் தெரிவித்த கருத்தானது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.