”திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில் பங்குபற்றியோர் குண்டர்கள் சிலரால் நேற்றைய தினம் திருகோணமலையில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டி தனமானது” என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது” பொலிஸார் வேடிக்கை பார்க்க குண்டர்களால் தியாகத் திலீபன் நினைவு ஊர்தி சேதப்படுத்தப்பட்டமையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டு மிராண்டிச் செயலாக உள்ளது.
இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். உண்ணா விரதமிருந்து மரணித்த உத்தமனை நினைவுகூரக் கூட இந்த மண்ணில் அனுமதி இல்லை என்பதை இது காட்டி நிற்கின்றது.
இச்செயல் இந்த நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதையும் தமிழ்மக்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதையும் பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றது.
இதனை சர்வதேசம் கண்டும் காணாதிருப்பது தான் வேதனையளிக்கின்றது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.