அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை அளிக்க வேண்டும் எனக் கோரி ஏராளமான பெண்கள் நீண்ட நடை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
தமது நாட்டிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கோரி அவுஸ்திரேலியாவின் தஞ்சமடைந்துள்ளோர், அங்கு தமக்கு நிரந்தரமாக வசிக்கும் உரிமை வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.
அவர்கள் அகதிகளாக இருந்தாலும், நிரந்தர குடியுரிமை விடயத்தில் அவுஸ்திரேலிய அரசு தம்மை தொடர்ந்தும் ஒரு ஸ்திரமற்ற நிலையிலேயே வைத்துள்ளது என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமக்கு நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் நிரந்திரமாக தங்கியிருக்க அனுமதி அளிக்கபப்ட வேண்டுமென, அவர்கள் மெல்பர்ன் நகரிலிருந்து நாட்டின் தலைநகர் கன்பரா வரையிலான 650 கிலோமீற்றர் தூரத்திற்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நடந்து செல்லும் பயணத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
மகளிரால் மட்டுமே முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம், கடந்த வெள்ளிக்கிழமை குடிவரவு, குடியேற்றம், குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அண்டூர் ஜைல்ஸ்ஸின் அலுவலகத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமானது.
மிகவும் வலுவாக தமது ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான இந்த பேரணியில், அகதி தஞ்சம் கோரியுள்ள பல்வேறு சமூகத்தினர் இணைந்துள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் தலைமையிடமான நாடாளுமன்றம் அமைந்துள்ள கன்பெரா நகரை நோக்கி பயணிக்கின்றனர்.