“பொலிஸ் மா அதிபர் ஒருவரை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு கிடையாது” என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாத விவகாரம் குறித்து, நாடாளுமன்றில் இன்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா மேலும் தெரிவிக்கையில் ” அரசியலமைப்புச் சபையினால் பொலிஸ் மா அதிபரின் பெயரை அங்கீகரிக்க மட்டும் தான் முடியும். ஆனால், அவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம்தான் உள்ளது. ஜனாதிபதியின் இந்த அதிகாரத்தை அரசியலமைபினாலோ, அரசியலமைப்புச் சபையினாலோ கேள்விக்குட்படுத்தவில்லை. எனினும், ஜனாதிபதி நியமிக்கும் ஒருவரை அங்கீகாரிப்பதற்கோ அங்கீகரிக்காமல் விடுவதற்கோ அரசியலமைப்புச் சபைக்கு முழு அதிகாரம் உள்ளது” இவ்வாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.