வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்தர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொலிப்பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மகா சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.
அரசாங்கத்தின் பொறுப்பு இது. 500 மகா சங்கத்தினரை அழைத்துக் கொண்டு வடக்கு – கிழக்கிலுள்ள விகாரைகளுக்குச் செல்ல நான் தயார்.
அங்குள்ள விகாரைகளை நாம் பார்வையிடுவோம். தொல்பொருட்கள் தொடர்பாக தேடிப் பார்ப்போம்.
இவற்றை பாதுகாக்க நாம் தவறிவிட்டால், எதிர்க்காலத்தில் தர்ம யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும்.
பௌத்தர்கள் எழுந்தால், அவர்களை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. இப்போதே நாம் தாமதப்படுத்திவிட்டோம்.
அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், எமக்கான எச்சரிக்கையொன்றைத்தான் விடுத்துள்ளார். வடக்கு- கிழக்கின் பல இடங்களில் விகாரைகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அங்கு கோயில்கள் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பிரித் ஓதக்கூட அங்கு அனுமதியில்லை.
இதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் அரசாங்கத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்து போராடுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.