2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக புதிய தவணைக்காக இந்த வருடம், மார்ச் மாதம் பாடசாலைகளை கால தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
ஆனால் அந்தத் தாமதங்களைக் குறைத்து 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும்.
அதன்படி, அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
இதன் ஊடாக 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும்.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்பட்டாலும் கூட அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும்.
அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நடத்தி முடிக்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
80 வீத பாடசாலை சீருடைகள் இலவசமாக எமக்கு கிடைக்கவுள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதே எமது இலக்காகும்.
உலக உணவு வேலைத்திட்டம், ருளுயுஐனு மற்றும் தனியார் துறையினரும் இதற்காக வழங்கும் ஆதரவை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம்.
இந்த வேலைத் திட்டத்திடத்திற்காக ஒரு நிதியத்தை ஆரம்பிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.