புதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அதன் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் அடியொற்றிய, முறையான வரைவொன்றை தயாரித்து புதிய விளையாட்டு சட்டத்தை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நீதி கட்டமைப்பு மற்றும் விளையாட்டு நிர்வாகத்தின் தற்போதைய கட்டமைப்பை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இந்த நிபுணர் குழு அறிக்கையில் தற்போதுள்ள சட்டத்தை முழுமையாக மாற்றுவதற்கு நடைமுறையிலிருக்கும் நீதிக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற்றில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய விளையாட்டு மேம்பாட்டு அதிகாரசபையொன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய விளையாட்டு சங்கங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு கொள்கைகளை வகுத்தல் மற்றும் சங்கங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரமும் மேற்படி அதிகார சபைக்கு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தற்போதைய விளையாட்டுச் சட்ட கட்டமைப்பிலும் நிர்வாகக் கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.