நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் 34 ஆயிரத்து 396 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் மேல் மாகாணத்திலேயே அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளதுடன், 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் மாதத்தின் கடைசி 18 நாட்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 844 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூகநல வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 15,321 நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 14,509 டெங்கு நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 4,563 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் பற்றாக்குறை காரணமாகவே நாட்டில் இவ்வாறு டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக தொற்றுநோயியல் பிரிவினால் அதிக ஆபத்துள்ள 45 டெங்கு பரவும் பகுதிகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.