போசாக்கான உணவுகள், உரங்கள் மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் மிகவும் அசாதாரண செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வரி வருமானம் அத்தியாவசியம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனாலும் வரி அறவிடும் முறையில் சாதாரணத் தன்மை ஒன்று இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.
பிரதானமாக பிள்ளைகளின் போசாக்கிற்கு தேவையான உணவு வகைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
உரங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. டீசலுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் ஈடுப்படுவர்களுக்கான டீசல் மற்றும் உரங்களை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும்.
அடுத்ததாக மருத்துவ பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவனைகளுக்கு பொருட்கள் கொண்டு வரப்படும் போது அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்கும்.
தனியார் மருத்துவனைகளுக்கு பணக்காரர் ஏழைகள் என அனைவரும் செல்கின்றார்கள்.
மருத்துவ உபகரணங்கள் இல்லாமையால் அரச மருத்துவனைகளில் அதிகமான பரிசோதனைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஆகவே தனியார் மருத்துவனைகளிலேயே பரிசோதனைகளை செய்ய வேண்டிய சூழல் காணப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் குறித்த மருத்துவ பொருட்களுக்கு வரி அறவிடுதல் மிகவும் அசாதாரணமாக விடயம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.